பிள்ளை எப்பிடி வயித்துக்குள்ள வாறது? வயித்துக்குள்ள இருந்து பிறகு எப்பிடி வெளில வாறது? சின்னனில எனக்கு இருந்த கன கேள்வியளில இதுவும் ஒண்டு. நான் சின்னனா இருக்கேக்க – சித்தியின்ர வயிறு பெருசா இருந்தது. ஒருநாள் வலியெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போனவை. அப்ப அது ஒரு சண்டைக்காலமாக இருக்கவேணும். இந்தியன் ஆர்மி நிண்ட நேரம் எண்டு நினைக்கிறன். சித்தப்பா சித்தியை ஏதோ சுவர் தாண்டி குறுக்குவழியால தான் கூட்டிக்கொண்டு போனவர். எனக்கு சரியா நினைவில்ல. அந்த நினைவுகள் மங்கலாத்தான் மனசுக்குள்ள இருக்கு. திரும்பி சித்தி வீட்டுக்கு வரேக்க ஒரு குழந்தையோட வந்தவா. சித்தியின்ர கடைசி மகள். என்ர தங்கச்சி. அதான் என்ர முதல் அனுபவம்.
பிறகு படங்களில பார்த்திருக்கிறன். ஆம்பிளையும் பொம்பிளையும் கட்டிப் பிடிப்பினம். கட்டிலில இருப்பினம். மெல்லமா கட்டிலில சாய்வினம். விளக்கு அணைஞ்சிரும். இருட்டாகிடும். பிறகு பொம்பிளையின்ர வயிறு பெருசா இருக்கம். ஒருநாள் வலியெடுத்து அழுவா. மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவினம். அறைக்குள்ள கொண்டு போனாப்பிறகு – வெளில எல்லாரும் அந்தரப்பட்டுக்கொண்டு ஓடித் திரிவினம். கொஞ்சநேரத்தில் “அம்மா” எண்டு அந்த அறைக்குள்ள இருந்து பெருசா ஒரு அலறல் வரும். பிறகு சின்னதா “ஆ….” எண்டு குழந்தை அழுற சத்தம் வரும். மருத்துவர் குழந்தைய தூக்கிக்கொண்டு வெளில வந்து “உங்களுக்கு ஆண்குழந்தை/பெண்குழந்தை பிறந்திருக்கு” எண்டு சொல்லுவார். இது எல்லாம் அநேகமா ஒரு அஞ்சு நிமிசத்தில நடந்து முடிஞ்சிடும். சில படங்களில ஒரு பாட்டிலயே எல்லாம் நடந்திரும்.
என்ர கடைசித்தம்பி நாங்கள் (நான், அம்மா, என்ர முதல் தம்பி) யேர்மனிக்கு அப்பாட்ட வந்தாப் பிறகு பிறந்தவன். நினைவு தெரிஞ்ச அல்லாட்டி ஒரளவு யோசிக்கக்கூடிய வயசில கிடைச்ச “குழந்தை பிறத்தல்” பற்றின நேரடி அனுபவம் அதான். ஆனால் எனக்கு அப்பவும் விளக்கமில்ல.
சின்னனில குழந்தை பிறக்கிறது பற்றி சின்னச் சின்னதா சில படிமங்கள் மனசில பதிஞ்சிருந்தது. ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிச்சா பிள்ளை பிறக்கும். கொஞ்சினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டி 10 மாசம் ஆனாப்பிறகு பிள்ளை பிறக்கும். இதெல்லாம் தமிழ் சினிமாப் படங்கள் பார்த்தும், பெரியாக்கள் எங்கட கேள்வியள சமாளிக்க சொல்லுற கதையளில இருந்தும் மனசில ஏற்பட்ட படிமங்கள்.
பள்ளிக்கூடத்திலயும் குழந்தை பிறக்கிறது பற்றி நான் படிக்கேல. கொழும்பில நான் கடைசியா படிச்ச வகுப்பு வரைக்கும் – எங்கட பாடப்புத்தகங்களில அல்லாட்டி பாடத்திட்டத்தில இது பற்றி இருக்கேல. பிறகு யேர்மனிக்கு நான் வந்து – யேர்மன் பள்ளிக்கூடத்தில சேரேக்க அவை அந்தப் பாடத்தக் கடந்து போட்டினம். பூப்படையிறது, குழந்தை உருவாகிறது பற்றியெல்லாம் அவை படிச்சு முடிச்சிட்டினம். அடுத்த வகுப்பிலயும் அதப்பற்றி படிப்பிச்சவை. ஆனா நான் வந்த புதுசு – எனக்கு மொழி தெரியாததால எதுவும் விளங்கேல. அப்ப எனக்கு யேர்மன் மொழியில தெரிஞ்ச வார்த்தையள் இரண்டுதான் – “ja” (ஓம்) “nein” (இல்லை). அதால, என்னால அப்ப அதப்பற்றி தெரிஞ்சு கொள்ள முடியேல. வீட்டிலயும் சொல்லித் தராயினம் தானே. என்ர வயச ஒட்டின தமிழ் நண்பர்களும் எனக்கு அப்ப இருக்கேல. அதால அதப் பற்றி தெரிஞ்சு கொள்ளுறதுக்கான வாய்ப்பு கிடைக்கேல. பிறகு கொஞ்சம் தாமதமாத்தான் சுயதேடல்கள் ஊடாக கற்றுக்கொள்ள முடிஞ்சது. இப்பிடி மொழி தெரியாததால, அந்நிய நாட்டில சொந்தங்களும் எங்கட வயசுக்குரிய நண்பர்களும் பக்கத்தில இல்லாததால, தனிய இருந்ததால, பதின்ம வயதின்ர தொடக்கத்தில நாட்டை விட்டு வந்ததால நான் (என்னை மாதிரி பலபேர்) இழந்ததுகள் கனக்க.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்லுறன்? ஒண்டுமில்ல அண்டைக்கு நண்பன் ஒருத்தன் ஒரு இணைப்பை தந்து “சிலவேளை உனக்கு குழந்தை பிறக்கிறது எப்பிடியெண்டு தெரியாட்டி போய்ப் பார்” எண்டு சொன்னான். என்னடா எண்டு பார்த்தால், படம் போட்டு கீழ விளக்கக் குறிப்புகளும் எழுதி இருந்தது. “குழந்தை பிறத்தல்” பற்றின சின்னப் பிள்ளையளுக்கான பாடப்புத்தகம்/படப்புத்தகம். scan செய்து யாரோ இணையத்தில ஏத்தியிருக்கினம். யேர்மன் மொழியில இருந்தது. அதப் பார்த்தோடன நினைவுகள் எல்லாம் கிளறுப்பட்டிட்டுது. அதான் கொஞ்சம் புலம்பினான்.
சரி – இந்த செய்முறை விளக்கத்த தமிழில போட்டால் என்ன எண்டு ஒரு பொறி தட்டிச்சு. கனபேருக்கு பிரியோசனமா இருக்கும். சின்னப் பிள்ளையள் கேள்வி கேட்டால் படம் காட்டி விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். சிலநேரம் இன்னும் “குழந்தை பெறுதல்” பற்றி விளக்கமில்லாமல் இருக்கிற பெரியாக்களுக்கும் உதவியா இருக்கும்.
இனி செய்முறை விளக்கத்தப் பார்ப்பம். –> பார்க்க இங்கே அழுத்தவும்
