லண்டனில் சீனாவும் ஈரானும் சிறிலங்காவும்
[2010 January 22 | 11:41]

போன கிழமை லண்டனுக்கு (london) போனான். லண்டனுக்கெண்டால் லண்டனுக்கில்லை. லூட்டனுக்கு (luton) போனான். நாங்கள் இங்கிலாந்து முழுக்கலயும் லண்டன் எண்டுதான் சொல்லுறனாங்கள். இங்கிலாந்தின்ர எந்தப் பகுதிக்கு போனாலும் – லண்டனுக்கு போனதெண்டுதான் சொல்லுறனாங்கள். அதேன் எண்டுதான் தெரியேல.

இது இரண்டாவது தடவை நான் இங்கிலாந்துக்கு போனது. முதல் தடவை கவிதை புத்தக அறிமுக நிகழ்வுக்காக போனான். நண்பர் ஒராளோட போனான். அப்ப நான் படிச்சுக்கொண்டிருந்த நேரம். அதுவும் இப்பிடி அவசரத்தில தான் போனான். வெள்ளிக்கிழமை போய் திங்கட்கிழமை வந்தது.

இந்த முறைப் பயணமும் திடீர் பயணம் தான். நண்பன் ஒருத்தன் “ரிக்கற் மலிவா போட்டிருக்கிறாங்கள் – நான் போறன் – நீயும் வாறியா” எண்டான். நானும் “எனக்கும் சேர்த்து” book பண்ணு எண்டன். என்னட்ட கேட்டிட்டு அவன் book பண்ணுறதுக்குள்ள அவங்கள் கொஞ்சம் விலை கூட்டிட்டாங்கள். இந்த முறையும் வெள்ளி போய் திங்கள் வந்தது.

லண்டன் பாக்கோணும் எண்டு போகல. உண்மையச் சொன்னால் எந்தத் திட்டமும் இருக்கேல. ஒருசிலர சந்திக்கிறது எண்டுறது மட்டும் யோசிச்சு வைச்சிருந்தனான். stansted ல தான் விமானம் இறங்கினது. அங்க வந்து நண்பர் கூட்டிக்கொண்டு போனவர். பண்டிக் காய்ச்சலுக்கு பயந்து, சிற்றுந்துக்குள்ள ஏறேக்க anti-bacteria gel பூசச் சொல்லித் தந்தார்.

அடுத்தநாள் லண்டன் பாப்பம் எண்டு வெளிக்கிட்டம். போனமுறை வந்து நிக்கேக்க பெருசா ஒரு இடமும் போகல. “லண்டனில என்ன பாக்கப்போறீர்” எண்டு நண்பர் கேட்டார். எனக்கெண்டால் ஒண்டையும் பார்க்க ஆர்வமிருக்கேல்ல. என்னத்த பாக்கிறது. big ben, tower bridge, buckingham palace, london eye எண்டு சின்னனில இருந்து பள்ளிக்கூடத்தில புத்தகத்தில பார்த்த + படிச்ச இடங்கள் தான். என்னவோ தெரியல ஒரு ஆர்வமும் இருக்கல. madame tussauds க்கு கிட்ட வந்து நிக்கேக்க அதுக்கு போவமோ எண்டு கேட்டார். அதுக்கும் என்ர முகத்தில எந்த அசைவும் இருக்கேல.

பிறகு வழிகாட்டி (navigator) ல ஏதும் பக்கத்தில ஆர்வமான இடங்கள் இருக்கா எண்டு பாக்க சொன்னார். அதில பார்த்து moving images museum க்கு போவம் எண்டு வெளிக்கிட்டம். traffic களுக்குள்ள நிண்டு சுத்துப்பட்டதில இடம் சரியா பிடிபடல. பிறகு உப்பிடியே போனா ஒண்டும் செய்யேலாதெண்டிட்டு சிற்றுந்த ஒரு இடத்தில நிப்பாட்டிட்டு லண்டன் தெருக்களில கொஞ்சம் நடப்பம் எண்டு வெளிக்கிட்டம். சிற்றுந்த விட்டிட்டு கொஞ்சத் தூரம் தான் நடந்தம் – மழை பெய்ய வெளிக்கிட்டுது. இப்பிடி – மழையோடும் குடையோடும் லண்டன் தெருவில் – கனநேரம் நடந்து திரிஞ்சம். நடக்கேக்கயும், சிற்றுந்து பயணத்திலயும் நிறைய விசயங்கள் பார்த்தம் + கதைச்சம்.

சரி மொத்தத்தில – லண்டனுக்கு போய் அப்பிடி என்னத்ததான் பார்த்துக் கிழிச்சனான்?

1. சீனத் தூதரகத்துக்கு எதிரில் சீனரின் கவனயீர்ப்புப் போராட்டம்

சிற்றுந்தில போய்க்கொண்டிருக்கேக்க நண்பர் சொன்னார் “இதில ஒராள் நிண்டு ஏதாவது ஒரு விசயத்த திரும்ப திரும்ப செய்துகொண்டிருப்பார் – பாரும்” எண்டு. அவர் சொன்னமாதிரி அந்த இடத்தில ஒராள் நிண்டு கையை உயர்த்தி ஏதோ செய்துகொண்டிருந்தார். சீனாவின் கொமுனிச அரசின் படுகொலைகளுக்கு எதிராக – ஒவ்வொரு நாளும் – சீனத் தூதரகத்துக்கு எதிராக நிண்டு இந்தக் கவனயீர்ப்ப செய்யினம். ஒவ்வொரு நாளும் ஒரே ஒராள் மட்டும் தான் அதை செய்வாராம். அதால போய் வாற ஆக்களின்ர கவனத்த ஈர்க்குறதுக்காக – ஏதாவது ஒண்ட அவர் திரும்ப திரும்ப செய்துகொண்டிருப்பாராம். அவருக்கு பக்கத்தில சீன அரசின் படுகொலைகள் பற்றி பதாகை ஒண்டும் இருக்கும். நாங்கள் எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வரேக்கயும் – அந்த மழைக்குள்ளயும் – அவர் தொடர்ந்து அதில நிண்டு கவனயீர்ப்ப செய்து கொண்டிருந்தார். யூன் மாதம் 2002 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக செய்யப்படுவதாக அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

faluninfo.net

பதாகைகளில் குறிப்பிடப்பட்டிருந்த இணையத்தள முகவரிகள்:
www.faluninfo.net
www.clearharmony.net

2. peace strike குழுவினரால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்

எந்த வீதியெண்டு சரியா தெரியல. ஆனா, big ben இருக்கிற இடத்துக்குக் கிட்ட ஒரு பிரதான வீதியின் கரையோரமா இந்த கவனயீர்ப்பு நடந்தது. நிறைய சிறிய கூடாரங்கள் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மழைபெய்துகொண்டிருந்தது. ஒரே ஒரு வயது போன மனிதர் குடைய பிடிச்சபடி அந்த கூடாரங்களின் நடுவில நிண்டு  கொண்டிருந்தார். பதாகைகள் சில பக்கத்தில இருந்தன. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிறிலங்கா என நான்கு நாடுகளினதும் நிலையை வெளிக்காட்டும் விதமாக பதாகைகள் இருந்தன. குறிப்பா சிறிலங்காவை புறக்கணிக்குமாறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. தடுப்புமுகாம் பற்றிய பதாகை ஒண்டும் இருந்தது. தமிழர்கள் எவரையும் அந்த இடத்தில் காணவில்லை. நாங்கள் (நானும் நண்பரும்) அந்த இடத்துக்கு கிட்ட போய் படங்கள் எடுத்தம். அந்த வயசு போன மனிதர் மிகப் பணிவாக – ஒரு சிறிய காகித துண்ட எடுத்து எங்களிட்ட நீட்டினார். அதில கையால www.peacestrike.org எண்டு இணையத்தள முகவரி எழுதப்பட்டிருந்தது.

peacestrike.com

peacestrike.com

peacestrike.com

peacestrike.com

peacestrike.com

3. அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரப் பதாகைகள்

சிற்றுந்து பயணத்தின் போது லண்டன் வீதிகளில நிறைய வகையான விளம்பரப் பதாகைகளை (poster) பார்க்க நேர்ந்தது. குறிப்பாக rt.com இனால் செய்யப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள். ஈரான் பிரச்சனையை மையப்படுத்திய ஒரு பதாகை (Who poses the greater nuclear threat?) கண்ணில் பட்டதால் ஆர்வம் மேலிட்டு – rt.com இன் ஏனைய பதாகைகளையும் பார்க்க வைத்தது.

காரணம், லண்டன் பயணத்துக்கு முந்திய ஒரு வாற இறுதி நாளில் யேர்மனியில் இயங்கும் ஈரானியர்களுக்கான ஒரு அமைப்பின் பிரதிநிதிகள் இருவரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தோம். ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பும் மக்கள் அலையை தமக்குச் சாதகமாக பயன்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் எண்ணம் பற்றி உரையாடினோம். மேற்குறிப்பிட்ட ஈரானியர்களுக்கான அமைப்பு (united4iran) ஈரானில் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் மக்களை ஆதரிக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும் என புலத்தில உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு அமைப்பு. அதை அமைப்பு எண்டு சொல்லுறத விட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கூட்டமைப்பு எண்டு சொல்லுறது பொருத்தமாக இருக்கும். ஈரானில் சனநாயக முறை அமுல்படுத்தப்படுறதையும், தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுறதையும் உறுதிசெய்யுறது தமது நோக்கம் எண்டு அந்த அமைப்பு சொல்லுது. தனிய ஈரானியர்களை மட்டுமில்லாமல் தம்மோடு இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள வேற்றினத்தவர்களையும் அழைக்கினம். பல்வேறு கொள்கையுடைய அமைப்புகள் இந்த தாய் அமைப்பின் கீழ் இணைந்திருக்கின்றன. பெரும்பாலும் ஐரோப்பியர்களின் உள்வாங்கலை சந்தேகத்தோட தான் அவை அணுகினம் எண்டத அவர்களோடான உரையாடலில இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.

rt.com

rt.com

அமெரிக்காவுக்கு எதிரான உருசியாவின் (russia) உருவாக்கமாக மேற்குறிப்பிட்ட பதாகைகள் இலண்டன் வீதிகளில் பல இடங்களில் காட்சியளிக்கின்றன. இங்க போய் இந்த campaign இன் பதாகைகள் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம்: http://rt.com/ads. அமெரிக்க விமான நிலையங்கள் பலவற்றில் இந்த விளம்பரப் பதாகைகளை காண்பிக்க மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4. அமெரிக்காவின் பயங்கரவாதமும் – அமெரிக்க மீட்பரின் புதிய அவதாரமும்

யேர்மனியில பார்க்க வெளிக்கிட்ட அவதார் திரைப்படத்த இங்கிலாந்தில போய்த்தான் பார்த்தனான். முதல் ticket எடுக்க போய் ticket வித்துத் தீர்ந்திட்டு எண்டு திரும்பி வந்து அடுத்த நாள் போய் பார்த்தனாங்கள். 3dல முதன் முதலா பார்த்த அனுபவம். நல்லா இருந்தது. உயர் தொழில்நுட்ப வேலைகள் வியக்க வைச்சுது. மிகப் பிரமாண்டமா இருந்திச்சு. மேலோட்டமா கதையைப் பார்த்தால் ரசிக்கக் கூடியதாக இருக்குது. செவ்விந்தியர்களைக் கொன்று குவித்த வெள்ளையர்கள் பற்றிய நினைப்பு வந்துகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானும், ஈராக்கும் நினைவில் வந்து போனது. நுண்ணரசியல் என்று பார்த்தால் தம்மையே மீட்பர்களாகக் காட்டியது.

இவைதான் லண்டனுக்கு (இங்கிலாந்து) போய் பார்த்து கிழிச்சது. :D

நிழற்படங்கள் அனைத்தும் நண்பரின் நிழற்படக் கருவியால் சுடப்பட்டவை.

2 கருத்துகள் : “லண்டனில் சீனாவும் ஈரானும் சிறிலங்காவும்”

  1. இந்தக்கிழமை நோர்வேக்கு வந்து கிழிக்கிறண்டு சொன்னான் பாவி. வரவுமில்ல கிழிக்கவுமில்ல.

    எரிச்சலுடன்
    பரதேசி

  2. சஞ்சீவ்காந்த்:

    இது ஒரு ராஜதந்திரப் பின்வாங்கல் நடவடிக்கை என்பதை இத்தால் பரதேசிக்கு அறியத்தருகிறேன் :D

உங்கள் கருத்தையும் பதிவு செய்க